சென்னை: மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழாவானது இன்று (அக்.24) மற்றும் நாளை நடைபெறுகிறது. ஒவ்வொரு சதய விழாவின் போதும் பல்வேறு சாதி அமைப்புகள், "ராஜராஜசோழன் எங்களின் சாதி" மற்றும் "ராஜராஜன்__ (சாதி பெயர்)" என தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி அமைப்பினரும் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை இணையதளத்தில் உலாவ விடுகின்றனர்.
மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி 985-ல் சோழப் பெருமன்னனாக அரியணையில் அமர்ந்தார். இவர் பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கி ராஜகேசரி என்ற பட்டத்தைப் பூண்டு, கி.பி 1014 வரை ஆட்சி புரிந்ததாக வரலாறும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் என பலராலும் பாராட்டப்படுகிறார். இந்நிலையில், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன் முடிசூடிய நாள், ஆண்டுதோறும் பெரிய கோயிலில் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல, இந்த ஆண்டும் 1038ஆம் ஆண்டு சதயவிழா இன்று (அக்.24) கோலாகலமாகத் தொடங்கி விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்ற ஆண்டு போல் இந்தாண்டும், இணையதளத்தில் ராஜராஜ சோழன் குறித்து சாதிய அமைப்புகள் 'ராஜராஜ சோழன் எங்க சாதி' என ராஜராஜ சோழன் பெயருடன் தங்கள் சாதி பெயரையும் இணைத்துள்ள போஸ்டர்கள், பேனர்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'ராஜராஜ சோழன் என்பவர் சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார் என்று நாம் கல்வெட்டு வாயிலாக, அறிய முடிகிறது. ஆனால், உலகம் முழுவது அவரின் பெருமையை நாம் கூறிக்கொண்டிருக்கிறோம். தமிழ் மன்னன் ராஜராஜசோழனை எந்த சாதி வட்டத்துக்குள்ளும் அடக்க முடியாது. மிகச் சிறந்த ஆட்சி முறையை நடத்தி மாமன்னனாக விளங்கியதன் ஆட்சி முறையைப் பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளன. அவர் எந்த இடத்திலும் சாதியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
மேலும் ராஜராஜ சோழன் அவரது காலத்தில், அனைத்து சமயத்திற்கும் நிதி உதவி செய்துள்ளார். குறிப்பாக, புத்த மடலாயங்கள், வைணவ தளங்கள், சைவ தளங்களும், சமண துறவிகளுக்கும், பொருள், பொன் உதவி செய்துள்ளார் என்று வராலாற்று ஆய்வுவகள் குறிப்பிடுகின்றன. தற்போது, 'பொன்னியின் செல்வன்' (Ponniyin Selvan) படம் வந்த பிறகு, மக்களின் மனதில் மாற்றம் என்பது கூட இல்லை. தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பரவ செய்த ராஜராஜனைக் கொண்டாடுவதற்கு பல சிறந்த காரணங்கள் இருக்கின்றன. ஆனால், சாதி ரீதியிலான வட்டத்துக்குள் இவரை அடைத்து சிறுமைப்படுத்தும் செயலைப் பலரும் செய்கின்றனர்' என்று விளக்கினார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ராஜசேகர் கூறியதாவது, ' "சோழர்கள்" (Cholas) என்பது ஒரு அரசின் பெயர், அதை ஒரு சாதிய வட்டத்துக்குள் திணிப்பது சரி இல்லை. இந்தியாவில், எப்படி வாழும் அனைவரும் 'இந்தியர்கள்' என்று நாம் குறிப்பிடுகிறமோ? அப்படிதான், சோழ நாட்டில் இருப்பவர்கள் சோழர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரு நாட்டை வளமையாகவும், வலிமையாகவும் உருவாக்க அனைத்து தரப்பினர்களின் உதவியும் தேவைப்படுகிறது. அதுபோல், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் உதவியுடன் தான் நாட்டை வளமைடைய வைத்தனர்.
அதற்காக அனைவரும், ராஜராஜ சோழன் எங்கள் சாதி எனக் குறிப்பிடுவது சரி இல்லை. மேலும், இப்போது இருக்கும் சாதி அமைப்பினர் அவர்களின் ஆதாயத்திற்காக இதை செய்து வருகின்றனர். முக்கியமாக, 'சோழர்' என்பது சாதியின் பெயர் கிடையாது. அது ஒரு அரசின் பெயர் மற்றும் முற்காலத்தில் அதாவது சங்காலத்தில் அது ஒரு இனக்குழுவின் பெயர் ஆகும். மேலும், பல்வேறு கல்வெட்டுகளில் இவரைக் குறித்து வருகின்றன.
ஆனால், கல்வெட்டில் அவர் எந்த 'குலம்' என்றும் எந்த 'சாதி' என்றும் குறிப்பிட்டது இல்லை. "ராஜராஜ சோழன்" என்று வரும் அவர் பெயருக்கு முன்னாள் வரும் உடையார், தேவர் என்ற பட்டங்களை வைத்து இவரை குறிப்பிட்ட சாதிக்குள் கட்டமைப்பது மிகவும் தவறானது. இதுமட்டுமின்றி, மேலும் அந்த பட்டங்களானது, சோழ மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதும், மேலும் அரசாங்க அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பாண்டியர்களுக்கும் (Pandyas) அனைத்து சாதிகளும் இதேதான் செய்கிறார்கள். பல்லவர்களுக்கும் (Pallavas) இதே தான். மேலும் அனைத்து மன்னர்களும் சில குறிப்பிட சாதிக்குள் தான் வர வேண்டும் என்றும், வரலாற்றை மாற்றும் முயற்சிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி தமிழரா? இல்லை தெலுங்கரா? என்ற சண்டையும் அவ்வப்போது, சமூக வலைதளத்தில் சண்டை நடைபெற்று வருகிறது. அந்த காலத்தில் ஒரு நாட்டின் மன்னன் எல்லா நாட்டினர் இடையேயும் பெண் கொடுத்து பெண் எடுத்துள்ளனர். இதனால், அவர்கள் எங்கள் சாதி, எங்கள் குலம் எனக்கூறும் செயல் தவறனது' என்று விளக்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராஜ ராஜ சோழனின் பள்ளிப்படை குறித்து நீங்காத மர்மங்கள்.. வரலாற்று ஆய்வாளர் கூறுவதென்ன?