தஞ்சாவூர் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் தமிழ்நேசன் வசித்து வருகிறார். அவரது உறவினர் சமுத்திரம் வள்ளி என்பவரின் வாகனம் 2019ஆம் ஆண்டு காணாமல் போனது. இது குறித்து திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணனிடம் தமிழ்நேசன் புகார் கொடுத்தார்.
ஆனால் பெரியண்ணன் வழக்குப்பதிவு செய்யாமல் காலம்தாழ்த்தி வந்தார். அதன்காரணமாக சமுத்திரவள்ளி மற்றும் தமிழ்நேசன் மீண்டும் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதையறிந்த பெரியண்ணன், பூதலூர் காவல் நிலையத்திற்கு சமுத்திரவள்ளி, தமிழ்நேசனை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதனால் மன உளைச்சல் அடைந்த சமுத்திரவள்ளி, தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் உடனடியாக திருவையாறு காவல்துறையினர் வாகனம் காணாமல் போனது குறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக திருவையாறு காவல் ஆய்வாளர் ஜெகதீசன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி பெரியண்ணன், திருச்சி அரியமங்கலம் அம்மன் குலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், புதுக்கோட்டை விராலிமலையைச் சேர்ந்த மணி, துவாக்குடி அண்ணா வளைவு நேரு நகரைச் சேர்ந்த புவனேஸ்வரன், மதுரை இந்திரா நகரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி இ-பாஸ் பயன்படுத்திய வாடகைக் கார் பறிமுதல் - உரிமையாளர் கைது!