தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோட்டில் அரசு கட்டடத்திற்கு அருகே 15 குடும்பங்கள் மாடுகளை வைத்து குறி சொல்லும் தொழில் செய்துவருகின்றனர். இவர்கள் பிழைப்பிற்காக, ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த இவர்களுக்கு, அரசு சார்பில் இதுவரை எவ்வித அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை.
தற்போது பெரும்பாலான மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்களின் குறிகளை நம்பாமல் போனதால், ஆங்காங்கே கூலி வேலைகளை செய்து பிழைத்துவருகின்றனர். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
தாங்கள் வசிப்பதற்கு நிரந்தர இடமோ, தங்கள் குடும்பங்களுக்கென குடும்ப அட்டைகளோ இல்லாததால், அரசு வழங்கிவரும் நிவாரணப் பொருள்களும், தங்களுக்குக் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி, ஒருவேளை உணவிற்கே தவித்துவரும் தங்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: உணவின்றி தவிக்கும் நரிக்குறவர்கள்!