மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஆவணம் கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ரத்த தானம் வழங்கி மத்திய- மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க நூதன வழியில் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான இளைஞர்கள் ரத்த தானம் வழங்கியதோடு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து வாசகங்கள் அடங்கிய உடைகளை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ”சமூகம் மீதான எங்களது நேசிப்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் சமுதாயத்துக்கு உதவக் கூடியது என்பதால் ரத்த தானம் வழங்குகிறோம். இதனை தொடர்ந்து நாங்கள் செய்துவருகிறோம். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., இவற்றுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தில் பல்வேறு வகையில் எமது எதிர்ப்பை தெரிவித்துவருகிறோம். அந்த வகையில் எங்களின் எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்கிறோம்.
இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒற்றுமைக்கு எதிரானது. எனவே, இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிக்கும் வகையில் இப்படி நூதன வடிவில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்”என்றனர்.
இதையும் படிங்க : உரிய அனுமதியின்றி செயல்பட்ட மழலையர் பள்ளிக்குச் சீல் - கல்வி அலுவலர்கள் அதிரடி