தஞ்சாவூர்: தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட ஜான் ரவி சென்னையில் வசித்து வருகிறார். இவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்டிருந்தார். மேலும் மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குறித்து இவர் இழிவாக ட்வீட் செய்திருந்தார். ஆகையால் இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவிடைமருதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ஜான் ரவியைக் குஜராத்தில் வைத்து கைது செய்த தமிழக போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜான் ரவி குறித்து எந்த தகவல்களையும் போலீசார் வெளியிடாததால், போலீசாரை கண்டித்து பாஜக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் நேற்று (பிப். 26) இரவு கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தஞ்சை முக்கிய சாலை வழியாக பாஜக நிர்வாகிகள் ஊர்வலமாகக் கிழக்கு காவல் நிலையத்தில் உள்ள கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன் தரையில் அமர்ந்து, ஜான் ரவி பற்றிய விபரங்களை அறிவிக்கக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் பசும்பொன் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேதா செல்வம், வழக்கறிஞர் பிரிவு பார்வையாளர் சுரேஷ்குமார், மாநகர தலைவர் வாசன் வெங்கட்ராமன், மாநகர துணைத்தலைவர் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.