தஞ்சாவூர்: சாய் கிரிப்டோ கன்சல்டன்சி பண மோசடி விவகாரத்தில் பாஜக மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கும்பகோணம் மேம்பாலம் அருகே சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் அர்ஜுன் கார்த்திக் என்பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் ஆக்கவுண்டென்டாக இவாஞ்சலின் என்பவரும், அவருடன் மேலும் பல ஊழியர்களும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்நிறுவனம் சார்பில் கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோரும் 15 ஆயிரம் ரூபாய் விகிதம், 18 மாதங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி, 18 மாதங்கள் முடிந்த பிறகு முதலீடு செய்த பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிறுவனத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் பணம் முதலீடு செய்தவர்களில் சிலருக்கு மட்டும் சுமார் 6 மாதங்கள் அவர்கள் கூறிய 15 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சில மாதங்கள் பணம் வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும்அந்நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் கார்த்திக் நிறுவனத்தைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகி உள்ளார். இதனை அடுத்துப் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த பொது மக்கள், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தலைமறைவாக இருந்த அந்நிறுவன உரிமையாளர் அர்ஜுன் கார்த்திக், ஆக்கவுண்டென்ட் இவாஞ்சலின் மற்றும் அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த ராஜா மற்றும் அவரது மகன் செல்வகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சாய் கிரிப்டோர்கரன்சி நிறுவனத்தில் இருந்து ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து எடுத்துக் கொண்டு தலைமறைவான அந்நிறுவனத்தின் பங்குதாரர் விக்னேஷுக்கு ஆதரவாக, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த பாஜக மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் கார்த்திக் என்பவரை திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் விரைவில் தலைமறைவாக உள்ள விக்னேஷ் கைது செய்யப்படுவார் என்றும் அவர் கைதிற்குப் பிறகு தான் எவ்வளவு பேரிடம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? அது தற்போது யாரிடம், எப்படி சிக்கியுள்ளது? உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் லியோ பட டிக்கெட் ரூ.450? - வைரலாகும் வீடியோவால் புதிய சர்ச்சை!