தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ராமசாமி கோயிலில் இன்று (ஆக.22) தஞ்சை வடக்கு மாவட்ட பாஜகவின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட மாவட்டச்செயலாளர் பாண்டிராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், 'பாஜக, விஎச்பி, இந்து முன்னணியினரை விட அதிகம் கடவுள் பக்திமிக்கவர்களாக திமுகவினர் உள்ளனர்.
நாட்டின் பெரும்பான்மை மக்கள் மதித்து வணங்கும் கடவுள் குறித்து சர்ச்சை கருத்துகளைப் பரப்புபவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், பெரியாரைப் பற்றி பேசியதற்காக கனல் கண்ணனை மட்டும் கைது செய்தது ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை ஆகும்.
போலீசார் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், யார் தவறாகப்பேசினாலும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு காவடி தூக்கினாரா? இல்லையா? என்பதை அவர் பிரதமரை சந்தித்தபோது அமர்ந்த விதம்; எழுதி வைத்ததைப் பேசிய விதம்; என அனைத்தையும் பார்த்தவர்கள் எது உண்மை என்பதனை உணர்ந்து கொள்வர்’ என்றார்.
மேலும், ‘ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மக்களை ஏமாற்ற தவறான கருத்தைப் பரப்பி, 2019ஆம் ஆண்டு தேர்தலைப் போல, 2024 தேர்தலிலும் பாஜக வெற்றியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அது கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலைப் போல அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தான் தரும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் காங்கிரஸுக்கு புதிய தலைவர்... மணிசங்கர் அய்யர்