தஞ்சாவூர்: கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு, தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக திமுக அரசைக் கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ் நாட்டை ஆளும் திமுக அரசு, திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறோம் என கூறிக்கொண்டு, தமிழின் வளர்ச்சியை தடுப்பதுடன், தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிக்கிறது என்றும், தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மேலும் மருத்துவப்படிப்பு தமிழில் வேண்டும் எனவும்; தமிழ் வளர்ச்சியை தடுக்காதே, தமிழை தாழ்த்தும் திமுக அரசே, தமிழை கொஞ்சம் வாழ விடு எனவும்; ஆட்சி மொழியாக தமிழ் வேண்டும் எனவும்; தமிழ் மொழியை காப்பது கடமை, திமுக அரசே மொழி அரசியல் செய்யாதே, காப்போம் காப்போம் தமிழ் மொழியை காப்போம் என பாஜக கட்சிக் கொடி ஏந்தி அக்கட்சியின் தொண்டர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னதாக மருது சகோதரர்கள் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன் பங்கேற்றார். இந்நிகழ்வில் மாநகர தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மகனை விடுவிக்க கோரிக்கை - போலீஸ் திட்டியதால் மனமுடைந்த தந்தை தற்கொலை முயற்சி