தஞ்சாவூர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்து தமிழ் மொழியின் தொன்மை வரலாற்று பெருமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கினார்.
தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், 'வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தியும் இந்தப் பேரணியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடத்தினர்.
உலகிலேயே தொன்மை, இனிமை, செழுமை, உயர்ந்த இலக்கணம், பழமை கொண்ட நம் தாய்மொழியான, தமிழில் கையொப்பம் இடுவோம் என்பன போன்ற பதாகைகளை ஏந்தியபடி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.
தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியின் நோக்கம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாணவர்கள் வழங்கினார்கள். இந்தப் பேரணி தஞ்சை ரயில் நிலையம் அருகே தொடங்கி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக தஞ்சை மாநகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தமிழன்னை சிலை அருகே முடிவுற்றது. இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பெயர்ப் பலகைகளில் தமிழை வலியுறுத்தி பேரணி!