தஞ்சாவூர் மாவட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மனைவி கலைச்செல்வி, பிற்பட்டோர் நலத்துறை மாணவிகள் விடுதியில் சமையலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஒக்கநாடு நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் ஏடிஎம் சென்டரில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் பணம் வர தாமதமாகியுள்ளது.
இதனைக் கவனித்த அருகிலிருந்த நபர் ஒருவர் கலைச்செல்வியிடம் உதவி செய்வதாகக் கூறி ஏடிஎம் கார்டை கேட்டுள்ளார். அவரிடம் கலைச்செல்வி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு ஞாபக மறதியில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு தனது தொலைபேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் ஒன்று வந்தது. அதில், தனது அக்கவுண்டிலிருந்து ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பது கலைச்செல்விக்கு தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஒரத்தநாடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேலாளரிடம் புகார் ஒன்றை கொடுத்தார். இதனைத்தொடர்ந்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. பணம் கொள்ளை போனது தொடர்பாக புகைப்படங்கள் வீடியோ காட்சிகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதன்படி மர்மநபர் ஒருவர் தஞ்சை சூரக்கோட்டை அருகே உள்ள ஒரு ஏடிஎம் சென்டரில் குறைந்தளவு பணத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகைக்கு தஞ்சாவூரில் உள்ள அரசு ஜூவல்லரி நகைக்கடையில் நகை வாங்கிக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது. இந்நிலையில, கொள்ளையடித்து சென்ற மர்ம நபரின் புகைப்படத்தை அந்த நகைக் கடை ஊழியர்கள் வெளியிட்டனர்.
ஒரத்தநாடு பகுதியில் அடிக்கடி ஏடிஎம் சென்டரில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாணவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? - சீமான் காட்டம்