தஞ்சாவூர்: அதிமுகவில் நிலவும் குழப்பம், உலக நாடுகளிடையே உள்ள குழப்பங்களை விட மிகப்பெரியது எனவும், அக்கூட்டணியிலுள்ள பாஜகவினர் எதிர் சித்தாந்தம் உடையவர்களைக் காட்டிலும், உடன் இருப்பவர்களுக்கே அதிகம் எதிராக செயல்படுவதே நோக்கமாக கொண்டுள்ளனர் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ (Bharat Jodo Yatra) நடைபயணம் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் விதமாக கும்பகோணம் புறவழிச்சாலைப் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவு காங்கிரஸ் கொடிக் கம்பத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப்.5) கொடியேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற உள்ளதாகவும், தங்களின் கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன், கொள்கை உணர்வுகளுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், எதிர் அணியில் மாபெரும் குழப்பம் நிலவுவதாகவும், இது உலக நாடுகளின் குழப்பங்களைக் காட்டிலும் மிகப்பெரியது என்றார். இந்த குழப்பங்களுக்கு காரணம் தமிழ்நாடு பாஜக தான் என்றும்; அக்கட்சி, எதிர் சித்தாந்தம் உடையவர்களை காட்டிலும், உடன் இருப்பவர்களுக்கே எதிராக அதிகம் செயல்படுவதேயே தனது சித்தாந்தமாக கொண்டது எனவும் தெரிவித்தார். இதே முறையில் தான், மகாராஷ்டிராவில் இவர்களது கூட்டணி இருந்த சிவசேனாவை 2ஆக உடைத்துப் பின் ஆட்சியை கலைத்து, கலகம் செய்தவர்களையே முதலமைச்சர் ஆக்கினார்கள் என்றும் தெரிவித்தார்.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கோவாவிலும் ஆட்சியை கலைத்தார்கள் எனவும்; இதேபோல தான் தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவை பிளவுப்படுத்தி, உருகுலைந்து போக செய்து வீழ்த்திருக்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் பேசிய அவர், நரியை போல தந்திரம் செய்பவர்கள் பாஜகவினர் என்றும், அதுதான் அவர்களுடைய உண்மை குணமும் கூட என்றும் விமர்சித்தார். இந்நிலையில், பொன்னையன் மட்டும் முன்னதாகவே, பாஜகவை கவனமோடு அணுகுகிறோம் என்று கூறியதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ண பகவானை போல, தேரை செலுத்த மகாபாரத யுத்தத்தில் வென்றதைப் போல, மாபெரும் வெற்றிகளை ஈட்டி வருகிறார் என்று கூறினார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ராகுல் காந்தி பிரசாரம் செய்ய வரமாட்டார் என்றும், தான் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டத்தில் பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி நெல் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய முதலமைச்சர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அதன்படி வேளாண்துறை சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் வேளாண்மைக்காக தனி வரவு செலவு நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரிக்கு பொன்னாடை அணிவித்தும், ஆள் உயர மாலையுடன் மலர் கிரீடம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: "பெண்ணாக மதுவிலக்கு குறித்து கனிமொழி இப்படி பேசலாமா" - அன்புமணி ராமதாஸ்