கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டத்தில், வெள்ள சேதங்களை பார்வையிட வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், கும்பகோணம் அடுத்த திம்மக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”அ.தி.மு.க. தற்போது செயல்படாத நிலையிலேயே உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிக செலவு செய்த போதும், எடப்பாடி நகராட்சியில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை என்றார். மேலும் அவருக்கு துணிச்சல் இருந்தால், தனிக்கட்சி தொடங்கி, தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மயிலாடுதுறை மாவட்டத்தில் 122 ஆண்டுகளுக்கு பிறகு, வரலாறு காணாத அளவில் 44 செ.மீ. மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நிவாரணமாக குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் என்பது போதுமானதல்ல என்றும் குறைந்தபட்சமாக மூவாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” என்றார்.
மேலும், “பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றார். மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீரங்கனை ப்ரியாவின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி, அரசு சார்பில் வீடு, 10 லட்ச ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றார்.
எதிர்கட்சி என்பதற்காக இது போதாது என சொல்ல முடியாது என்றும், அதற்காக தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பீர்களா என கேள்வி கேட்காதீர்கள் என்றார். மேலும் அரசு நல்லது செய்யும் போது பாராட்டுவதும், தவறு செய்யும் போது சுட்டிக்காட்டுவதும் தான் எதிர்கட்சிகளின் கடமை எனக் கூறிய டி.டி.வி. தினகரன், தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி மக்களிடையே நிலவுவதாக கூறினார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலில், ஆட்சி அதிகாரம் மற்றும் பலமாக கூட்டணியில் உள்ள தி.மு.க.வை எதிர்க்க, அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு, தேசிய கட்சி ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்றார். தமிழகத்திற்கு நல்லது செய்யக் கூடிய பிரதமரை நாம் தேர்வு செய்ய முடியும் என்றும், அது நடக்காத பட்சத்தில், அ.ம.மு.க. தனித்து தேர்தலில் போட்டியிடும் துணிவுடன் இருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாதுகாப்பு அச்சுறுத்தல் : பா.ஜ.க. தலைவர்கள் 4 பேருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு