தஞ்சாவூர்: ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மாணவர்களுக்கு மன அழுத்தம் தராமல், அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் விதமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் எனும் மாணவர் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த பின்பு மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இருமுறை எழுதிய தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் பல்வேறு அமைப்பினரும், கட்சிகளும் நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கட்சி சார்பில் இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி ஆகியோர் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூர் ரயிலடி அருகே இன்று (ஆகஸ்ட் 20 ) நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன் (திருவையாறு), நீலமேகம் (தஞ்சை), அண்ணாதுரை ( பட்டுக்கோட்டை), உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: NEET Exemption Issue : தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்!
பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசும்போது, “நீட் தேர்வு வருவதற்கு முன்பே உலக புகழ் பெற்ற மருத்துவர்களை நாம் கொண்டிருந்தோம். இந்த பிரச்சினை, தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கான குரலாக பார்க்க வேண்டும். கரோனா காலத்தில் அனைத்து தொழில்களும் நலிவடைந்த நிலையில், நீட் தேர்வு பயிற்சி மையம் மட்டும் நலிவடையவில்லை.
மத்திய அரசைப் பொறுத்தவரை நீட் பயிற்சியை வணிகமாக பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை மாணவர்களின் உயிர் முக்கியம். மருத்துவ படிப்பு கிடைக்கும் என்ற அழுத்ததை நாம் தரக்கூடாது. ஏழை எளிய மாணவர்கள் கடன் வாங்கி தான் படிக்கிறார்கள். அப்படி படிக்கும் போது அந்த தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்த மூன்று ஆண்டுக்கு அவர்கள் மூன்று லட்சம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கிறது. எத்தனையோ மாணவர்களை நாம் இழந்துள்ளோம். இதுபோன்ற சூழல் இனிமேல் வரக்கூடாது என்பதற்காக தான் போராட்டம். தமிழ்நாட்டின் மக்களின் உணர்வுக்கு என்றைக்குமே முரண்பாடான சிந்தனை கொண்ட ஆளுநராக இருந்து கொண்டிருக்கிறார்.
அரசியல் கடந்து பொதுநலத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு மனஅழுத்தம் தராமல் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக, கனவுகளை நிறைவேற்றும் விதமாக நீட் தேர்வு என்பதை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும். இந்தப் பணியில் நீங்களும் எங்களோடு குரல் கொடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சியான அதிமுக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இந்தப் போராட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட மருத்துவர் அணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.