தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ராமநாதன் தலைமையில் இன்று (நவ.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் தங்களது வார்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் பேசியபோது, மாநகராட்சி தீர்மானம் எண் 665-ஐ சுட்டிக்காட்டிய அவர் ராஜகோரி சுடுகாட்டில் தனியாருக்கு வழங்கிய ஒப்புந்தப் புள்ளிக்கான தீர்மானத்தை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிகை வைத்தார்.
அந்த தீர்மானத்தில் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ராஜகோரி சுடுகாட்டில் உடல்கள் தகனம் செய்ய தேவையான விறகு, வைக்கோல் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்க ரூ.33 லட்சத்து 50 ஆயிரம் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்யவேண்டும் என கவுன்சிலர் மணிகண்டன் பேசினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து மேயர் ராமநாதன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்து கூட்டத்தை முடித்தார். இதுகுறித்து கூட்டத்திற்கு பின் கவுன்சிலர் மணிகண்டன் கூறும்போது, மாநகராட்சி சார்பில் ராஜகோரி சுடுகாட்டில் உடல்கள் இலவசமாக தகனம் செய்வதற்கு தனியார் அமைப்பிடம் வழங்கப்பட்டு; அதை அந்த அமைப்பு செய்ய இயலாத காரணத்தினால் தற்போது மாநகராட்சி சார்பில் உடல்கள் இலவசமாக தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மட்டுமே செலவாகும் நிலை உள்ளதால் அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாகவும், அதற்கு மேயர் பதிலளிக்கவில்லை என்றார். தொட்டிலில் இருந்து ஊழல் தொடங்காமல் சுடுகாட்டில் இருந்து தஞ்சாவூர் மாநகராட்சி ஊழல் தொடங்குவதாக சொல்லி குற்றம்சாட்டினார். இக்கூட்டத்தில் ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு வழக்கில் எஸ்கேப்.. மற்றொரு வழக்கில் சிக்கல்!