தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் மற்றும் இதைச் சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் காவிரி நீர் பாய்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.
இதனால் இந்தப் பகுதிகளில் கடந்த நான்கு வருடங்களாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வந்தது. கால்நடைகளான ஆடு, மாடுகள் தண்ணீரின்றி இறக்கவும் நேரிட்டன. பருவமழையும் சரிவர கைகொடுக்காததால் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
இதனால் நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து ஆழ்குழாய்க் கிணறுகளும் இயங்காமல் போய் விட்டன. இதை அறிந்த உள்ளாட்சி நிர்வாகம் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய, கிராமப்பகுதியில் உள்ள ஒரு சில ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்த தண்ணீரை வாகனங்கள் மூலம் எடுத்து வந்து, நகர்ப் பகுதியில் உள்ள மக்களுக்கு சப்ளை செய்தன.
அப்படி இருந்தும் சப்ளை செய்ய முடியாத பகுதிகளில் உள்ள மக்கள் தண்ணீர் தேவைக்கு மிகுந்த அல்லல்பட்டனர். இதனால் குடிநீர் சப்ளை செய்யக்கோரி பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்கள், சாலைமறியல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசு பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிலையில், தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு கடைமடை பகுதிக்கு வந்த, காவிரி நீரைக் கொண்டு அரசு அதிகாரிகள் வாய்க்கால்கள் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். வாய்க்கால் இல்லாத ஏரி குளங்களில் பம்பிங் சிஸ்டம் மூலம் நீர் கொண்டு சென்று, நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து தற்போது பெய்த கனமழை காரணமாக பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் வரும் கோடை காலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கை பொது மக்களிடையே பிறந்துள்ளது.
காரணம் இப்பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களும் நீரால் நிரம்பி உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் நன்கு உயர்ந்து கோடை காலங்களில் ஆழ்குழாய்க் கிணறு மூலம் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:நான்கு வருடங்களுக்கு பிறகு கடைமடையை தொட்ட காவிரி நீர்!