தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலருக்கும் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தஞ்சாவூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், பல்வேறு தொழில் பிரிவுகளில் 50 விழுக்காடு காலியிடங்கள் உள்ளன. அதில், நேரடி சேர்க்கை மூலம் அக்டோபர் 31ஆம் தேதி வரை பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கணினி மற்றும் டெக்னீசியன் தொழில் பிரிவில் உள்ள மகளிருக்கு வயது வரம்பு இல்லை.
உடனடி வேலைவாய்ப்பில் கிடைத்திடும் பல்வேறு தொழில் பிரிவுகள் உள்ள காலி இடங்களில் சேர்ந்து பயன் பெறுமாறு மாணவ மாணவிகளை கேட்டுக் கொள்கிறேன். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ மாணவியருக்கு பேருந்து பயண அட்டை, மாதாந்திர உதவித் தொகையாக 500 ரூபாய், அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், புத்தகங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.