தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள தனியார் விடுதியில் அகில பாரத இந்து மகா சபாவின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் இராம நிரஞ்சன் தலைமையிலும், மாநில துணை தலைவர் ராகவன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், தேசிய துணை தலைவரும், மாநில தலைவருமான த பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில், கும்பகோணம் அருகே பிரசித்திப் பெற்ற ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் உதவி ஆணையர் பணியிடமும், 108 வைணவ தலங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் பணியிடமும் நீண்ட காலமாக காலியாகவுள்ளதால் இதனை விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் தஞ்சாவூர் விக்ரவாண்டி 45சி தேசிய நெடுஞ்சாலை பணிகள் பல ஆண்டுகளாக மந்தமாக நடைபெற்று வரும் நிலையில், இதனை விரைவுபடுத்தி முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில், செய்தியாளர்களைச் சந்தித்த த பாலசுப்பிரமணியன், “நவக்கிரக ஸ்தலங்களில், திங்கள், சந்திரன் மற்றும் ஆலங்குடி குரு ஸ்தலமும் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், எஞ்சிய சூரியனார்கோயில் சூரியன் ஸ்தலம் மற்றும் கஞ்சனூர் சுக்ரன் ஸ்தலமும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு இன்னமும் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. இதற்கு விரைந்து கும்பாபிஷேகம் நடத்திட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆலய பராமரிப்பு பணிகளுக்காக முதலமைச்சர் 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்து அதில் முதற்கட்டமாக அறநிலையத்துறைக்கு ரூபாய் 50 கோடி வழங்கியுள்ளார்.
ஆனால், அவை இன்னும் கோயிலுக்கு வந்தபாடு இல்லை. இவை விரைவில் சம்மந்தப்பட்ட கோயிலுக்கு அனுப்பிட வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தேவையில்லாமல் அரசு மூக்கை நுழைப்பது சரியல்ல, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அங்கு நிரந்தரமாக அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்து ஆலயங்கள், இந்து தெய்வங்கள், இந்து மதம் அவமரியாதையாக பேசும், அவமதிப்பு செய்யும் நிலை நீடிக்கிறது, இது கண்டிக்கத்தக்கது, இதனை தடுத்து நிறுத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் மதமாற்றம் வேகமாக நடந்து வருகிறது, இதனை தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும். இது பிற மதத்தவர்களை கட்டுப்படுத்த அல்ல. இந்து மதத்தினரை காப்பாற்ற, மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டிலும் திறக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். ஆலய சொத்துக்களை மீட்பதில், தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வேகமாக செயல்பட்டு, பல கோயில்களின் பல கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டெடுத்துள்ளார்.
அதனை பாராட்டுகிறோம்; அதே வேளையில், இன்னும் பல்வேறு முக்கிய பெரிய கோயில்களில் கோயில் சொத்துக்களை பலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவற்றையும் விரைந்து முழுமையாக மீட்க வேண்டும். அதுபோலவே, இந்து கோயில்களின் சொத்துக்களை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்து கோயில் சொத்துக்களில் இருந்து சமுதாயம் பயன்பெறும் வகையில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அமைத்திட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: “காங்கிரஸ் அரசியலில் இல்லாத நிலை உருவாக வேண்டும்” - அண்ணாமலை பேச்சு