கும்பகோணம்: சுவாமிநாதசுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின், அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். அழகன் என்றும் தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமையப்பெற்ற கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிக்கட்டுகளாக இருந்து, இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.
கட்டுமலை கோயிலான இத்தலத்தில் தான் முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்ற பெருமை கொண்டது. சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால் இத்தலத்தில் இருக்கும் முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி எனப் போற்றப்படுகிறார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது, நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்றது என பெருமை கொண்ட தலமாகும். இத்தகைய சிறப்புகள் பலகொண்ட சுவாமிமலையில் திருக்கோயிலில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, இன்றிரவு பாலசுப்பிரமணிய சுவாமி விசேஷ பட்டு வஸ்திரம், மலர்கள் மாலைகள் சூடி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் எழுந்தருள, திருக்கோயில் பிரகாரத்தில் தங்கரத உலா சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: 21 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலமாக நடைபெற்ற பொன்னர்சங்கர் புரவி எடுப்பு திருவிழா..
இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்க ரதம் இழுத்தனர். குறிப்பாக ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு, கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் விசேஷ பௌர்ணமி கிரிவலத்தில் கலந்து கொண்டு, தங்களது பிரார்த்தனைகள் அனைத்தையும் விரைந்து முருகப்பெருமான் நிறைவேற்றிட வேண்டி, தீபங்கள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும் வல்லப கணபதி, மூலவர் சுவாமிநாதசுவாமி, மற்றும் உற்சவர் சண்முகசுவாமி, பாலசுப்பிரமணியசுவாமி, மீனாட்சி, சுந்தரேஸ்வரர், ஆகியோரையும் தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். கிரிவலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாக்கு மட்டையில் வைத்து அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அழகர்கோயில் ஆடித்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!