தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டு கருத்தரங்கம், ‘இவர் தான் கலைஞர்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலைத்துறை புரட்சியாளர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு ‘எதிர்நீச்சல் வீரர்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “முதலமைச்சரும் அரசியல் கட்சித் தலைவரும் மக்களின் எண்ண ஓட்டத்திற்குள் செல்ல வேண்டும். மதவாதத்தை இந்தியா இன்றைக்கு எதிர்க்கிறது, மதசார்பின்மை வேண்டுமென்று எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் சொல்கிறார்கள்.
இந்துத்துவா தத்துவத்தை எதிர்க்க வேண்டும், மோடியை எதிர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, அந்தக் கருத்துகளை எதிர்ப்பதற்கு எந்த ஆயுதத்தை ஏந்துவது, எந்த கருத்தியலை ஏந்துவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்த கருத்தியல் இருக்கிற ஒரே இடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான், அதற்குக் காரணம் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் போட்ட எதிர்நீச்சல் தான்” என்றார்.
தொடர்ந்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிறைவுறை ஆற்றிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போரில் சமூகநீதிக்கான சரித்திர நாயகராக இருக்கக்கூடிய இன்றைய முதலமைச்சர் சிறப்பாக ஆளுமை அமைத்து, இன்றைக்கு பெண்கள் உள்பட அர்ச்சகராக உருவாக்கி, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்யாத ஒரு சமூகப் புரட்சியை செய்திருக்கிறார்.
அந்தப் புரட்சிக்காக பாராட்டி ஊக்கப்படுத்துகின்ற இந்த விழா வரலாற்றில் மிக முக்கியமான விழா. இந்தியாவே திருப்பி பார்க்கக் கூடிய விழா, ஏனென்றால் இந்த காலகட்டத்தில் தான் கோயில்களை திமுக அபகரித்து விட்டதா, கோயில்களிலே அனைவருக்கும் அனைத்தும் என்ற உரிமையை உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய பிற்பாடு, வலியுறுத்தியபடி செய்து காட்டி இந்தியாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். அப்படி அதை புரிந்து கொள்ளாதவர்கள், இந்தியாவின் வெற்றி இன்னும் 6 மாதத்தில், இந்தியா கூட்டணி வெற்றி 6 மாதத்தில் அதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கி.வீரமணி தொகுத்த ‘தாய் வீட்டில் கலைஞர்’ என்ற நூலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொள்கிறார். இதில் முன்னாள் நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: நாயக்கனேரி பட்டியலின பெண் பதவியேற்பு விவகாரம்: பறை இசைத்து கண்டன ஆர்ப்பாட்டம்!