தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சாமியானா பந்தல் மற்றும் வாடகை பாத்திர கடையை நடத்தி வருகிறார். இவர் பா.ம.க.வில் திருபுவனம் முன்னாள் நகர செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், சாமியானா பந்தல் அமைக்கும் பணிக்கு கூலித்தொழிலாளர்களை அழைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இஸ்லாமியர்கள் சிலர் மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ராமலிங்கம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த நிகழ்வை அங்குள்ளவர்கள் செல்போனின் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இரவு கடையை பூட்டிவிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு ராமலிங்கம் வந்து கொண்டிருந்தார். அப்போது திருபுவனம் தெருவில் அவருடைய ஆட்டோவை கார் ஒன்று வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய நான்கு பேர் கொண்ட கும்பல் ராமலிங்கத்தின் இரு கைகளையும் வெட்டினர். பலத்த காயமடைந்த அவரை அங்கேயே போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கைகள் வெட்டப்பட்டதால் ரத்தம் அதிகம் வெளியேறியது. பின்னர் அந்த பகுதியாக வந்தவர்கள் ராமலிங்கத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமலிங்கம் இறந்து விட்டார்.
இதையடுத்து திருவிடைமருதுார் பகுதியில் இந்து - முஸ்லீம் பிரச்சினை ஏற்படும் என்பதால், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.,லோகநாதன், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் மாவட்ட எஸ்.பிகள்., மூன்று எ.டி.எஸ்.பி., 10 டி.எஸ்.பி.,15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.
கொலையாளிகளை கைது செய்தால் தான் நாங்கள் உடலை தகனம் செய்வோம் என ராமலிங்கத்தின் உறவினர்களும், சில இந்து அமைப்புகளும் கூறினார். மேலும், சிலர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் திருபுவனம், திருவிடைமருதுார் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதை தொடர்ந்து வீடியோவில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராமலிங்கம் வாக்குவாதம் செய்யும் 5 நிமிட வீடியோ பதிவுகள் சமூக வளைதலங்களில் பரவியதை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சியினர் திருபுவனத்தில் ஒன்று கூடி இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்ததால் போலீசார் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ளனர்.