தஞ்சாவூர்: கும்பகோணம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது இளைஞர். இவருக்கு தந்தை இல்லை, தாய் வெளிநாட்டில் பணியாற்றுவதால், பாட்டியுடன் வசித்து, ஓட்டுநர் பணி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வீட்டிலிருந்து சிதம்பரத்தில் நடைபெறும் ஒரு திருமணத்திற்கு செல்வதாக தனது பாட்டியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வீடு திரும்பாததால் இளைஞரின் பாட்டி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் இளைஞரது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததால், வீட்டிற்கு வந்துவிடுவார் என காத்திருந்ததாகவும், ஆனால் 2 நாட்களாகியும் வராததால் சந்தேகமடைந்த இளைஞரின் பாட்டி, இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இளைஞர் சென்று வந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர் சோழபுரம் கீழ வீதிக்கு செல்வது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகத்தின் பேரில் இளைஞருக்கு நெருங்கிய நண்பரான 47 வயது நபரிடம் போலீசார் கெடுபிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில், நான் தான் இளைஞரைக் கொன்று தன் வீட்டிலேயே புதைத்துள்ளேன் என ஒப்புக்கொண்டுள்ளார். அதனையடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீசார், சம்பவ நடந்த இடத்திற்கு தஞ்சையில் இருந்து தடயவியல் ஆய்வுத்துறை உதவி இயக்குனர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் மற்றும் மோப்பநாய் சோழாவையும் துப்பு துலங்க வரவழைத்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கும்பகோணம் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில், வீட்டில் புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது.
அப்படி தோண்டி எடுக்கும் போது இளைஞரின் தலை தனியாகவும், உடல் தனியாகவும் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த உடல் புதைக்கப்பட்டு சுமார் 30 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில், உடல் உருக்குலைந்து இருந்ததால் சிறப்பு மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கேயே உடற்கூறாய்வு நடைபெற்றது. பிறகு, இளைஞரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பழக்கம் இருந்துள்ளது. ஆகையால் இளைஞருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்போது, ஒருவேளை அவர் உயிரிழந்து இருக்கலாம், மேலும் அந்த சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்க, தன் வீட்டிலேயே புதைத்து இருக்கலாம்" என தெரிவித்துள்ளனர்.
இது தவிர, அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞரும் கடந்த 2021 முதல் மாயமாகியுள்ளார். தற்போது 2 ஆண்டுகள் ஆனநிலையில், இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியாததாலும், அவரும் குற்றம்சாட்டப்பட்டவரின் நண்பர் என்பதாலும், இந்த இளைஞர் மாயமானத்திற்கும், குற்றம்சாட்டப்பட்டவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, "குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டு மருந்து கொடுக்கும் வைத்தியராகவும், இதற்கு முன்னாள் கொத்தனார் வேலை செயது வந்ததாகும் கூறப்படுகிறது. மேலும் இவர் பெண்களிடம் பேசுவதை அதிகம் விரும்பமாட்டார் என்றும், ஆண்களிடம் மட்டுமே அதிகம் பேசுவார்" எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் இருந்தும் அவர்களிடமிருந்து பிரிந்தும் தனித்து வாழ்ந்துள்ளார். முன்னர் இவருக்கு இருமுறை திருமணம் நடந்து இரு மனைவிகளும் இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தற்போது இவர் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.