தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், திருநாகேஸ்வரம் கடை வீதியில் நேற்றிரவு திருநீலக்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வடகரை கீழத்தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ்(24) மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளரை செல்போனில் படம் பிடித்தும், "நீ குடித்துவிட்டு வந்து டூட்டி பார்க்கிறாய்.. இல்லையென்றால் ஊதிக் காட்டு" என்று தொடர்ந்து சொன்னதையே பலமுறை அவரிடம் சொல்லி தகராறு செய்தும், கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பொறுமையை கடைப்பிடித்த உதவி ஆய்வாளர் பழனிவேல், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையைக் கைவிட்டு மற்ற காவலர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
அப்போது, "நீ குடித்துவிட்டு வந்து தான் டூட்டி பார்க்கிறாய், வாயை ஊது இல்லையென்றால், நான் மறியல் செய்வேன் என்று நடு வீட்டில் படுத்துக்கிடப்பது போல, சாலையில் படுத்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவரை எழுப்ப முயன்ற அப்பகுதி மக்களிடம் அதெல்லம் எழுந்திருக்க முடியாது என வாக்குவாதம் செய்ததால் யாரும் அவர் அருகில் செல்லவில்லை, இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் கடை வீதியில் மக்கள் கூட்டம் திரண்டு கூட்ட நெரிசல் அதிகமானது. பின்னர் அந்த தகவல் அறிந்து வந்த இரண்டு போலீசார் வந்து சாலையில் படுத்து இருந்த மதுப்பிரியரை குண்டுக்கட்டாக தூக்குச் சென்று அப்புறப்படுத்தினர். அப்படியும் முரண்டு பிடித்த மதுப்பிரியர், அவர் குடித்துவிட்டு வந்து டூட்டி பார்க்கிறார் என்று அவர்களிடமும் வாதம் செய்துள்ளார்.
இதனால் அந்த போலீசாரின் பரிதாப நிலையைக் கண்ட அப்பகுதி மக்கள் வேதனையுடன் பார்த்தனர். பின்னர் ஒருவழியாக, ஆரோக்கியராஜை ஆட்டோவில் ஏற்றக் கொண்டு, திருநீலக்குடி காவல் நிலையம் கொண்டு சென்று, சிறப்பாக கவனித்து விசாரிக்க பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
ஆனால் திருநாகேஸ்வரத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேல் மதுப்பழக்கம் இல்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீசாரிடமே பொது இடத்தில், பொதுமக்கள் மத்தியில், மதுப்பிரியர் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மேலும், தன்னிடம் வாக்குவாதம் செய்த மதுப்பிரியரை ஒன்றும் செய்ய முடியாமல், தவித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நிலையை எண்ணியும் வருத்தமடைந்தனர். அச்சம்பவத்தின் போது அங்கு இருந்த நபர்கள் தாங்கள் செல்போனில் பதிவு செய்த இந்த காணொளி காட்சி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பழனியில் தொடரும் போராட்டம்.. 10 முடி எடுக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்!