தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (73). இவர் அரசுப் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் பணி புரியும் போது பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் நன்கு பயிற்சி கொடுத்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி பதக்கங்கள் பெறச்செய்தவர்.
மேலும் இவர் சிறு வயதிலேயே பல்வேறு வகையான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிக்குவித்தவர். இந்நிலையில், ஓய்வு பெற்று 15 வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது 73 வயதாகி முதுமை அடைந்த நிலையிலும் இவருக்கு விளையாட்டு மீதான ஆர்வம் சற்றும் குறையாமல் விளையாட்டுகளில் கலந்துகொள்வதும், சிறுவர், சிறுமியர்கள் இளைஞர்களுக்கு விளையாட்டுகளை கற்றுக் கொடுப்பதையும் இதுவரை பின்பற்றி வருகின்றார்.
சமீபத்தில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்த நிலையிலும் இதைத் தொடர்ந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற 21ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளில் 29 நாடுகள் பங்கு பெற்ற நிலையில், முதியோருக்கான பிரிவில் தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஒரு தங்கம், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதையடுத்து, இவரை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். முடிந்தவரை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக விளையாட்டுகளில் பயிற்சி அளித்து அவர்களை சாதனை படைக்க உறுதுணையாக இருக்கப்போகிறேன் என்கிறார்.
இதையும் படிங்க: