தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் (மே.19) கன மழை பெய்தது. இதனால், தஞ்சாவூர் அருகே உள்ள குலமங்கலம் பகுதியில், ஐந்து ஏக்கரில் பயிரிடப்பட்ட 5,000 வாழை மரங்கள் முற்றிலும் முறிந்தன.
மழையினால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ’’கடந்த இரண்டு வருடங்களாக கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, வாழை விற்பனை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போதுள்ள தடை உத்தரவால் விற்பனை இல்லாமல் மரங்களிலே வாழை இலை, பழங்கள் காய்ந்து வருகின்றன. வரும் 24ஆம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யவிருந்த நிலையில், பலத்த மழையால் அனைத்து மரங்களும் முற்றிலும் முறிந்து விட்டன.
ஒரு வருட காலமாக முதலீடு செய்து, தற்போது லாபம் பார்க்க வேண்டிய நேரத்தில் மரங்கள் அனைத்தும் சேதம் ஆகி விட்டன. இனிமேல் இந்த மரங்களால் ஒரு ரூபாய் கூட தங்களால் வருவாய் ஈட்ட முடியாது. மேலும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்கு கூடுதலாக 20 ஆயிரம் வரை செலவு ஏற்படும்.
எனவே நெல் போன்ற பயிர்களுக்கு காப்பீடு வழங்குவது போலவும், தங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஆனால் வாழை பயிர்களை தோட்டக்கலை பயிர் என்று இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டியின் உயிர் காக்கப் போராடிய இளம்பெண்ணை பாராட்டிய ஸ்டாலின்