தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேவுள்ள மானாங்கோரை பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதியின் மகன் பிரகதீஷ், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக காவேரி ஆற்றில் தண்ணீர் வராததால், பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போன நிலையில், மனமுடைந்த முகுந்தன் வருமானத்திற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கரோனா பரவலை தடுக்கும் விதமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டிற்கு சென்ற முகுந்தன் தாயகம் திரும்ப முடியவில்லை.
இந்த சூழலில், கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டதால், முகுந்தனின் மனைவி வரலட்சுமி குறுவை விவசாயம் செய்ய ஆரம்பித்தார். ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக விவசாய பணிகள் செய்ய யாரும் ஆட்கள் வராத நிலையில், தொடர்ந்து செய்வது அறியாமல் நின்ற வரலட்சுமியிடம் மகன் பிரகதீஷ், தான் விவசாயம் செய்வதாக தெரிவித்ததை அடுத்து தாயும், 9 வயது மகனும் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
பிரகதீஷ் தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு உதவியாக வரப்பு வெட்டுதல், களை பறித்தல் போன்ற விவசாய பணிகளை ஆர்வமாக செய்து வருகிறார்.