தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழக்கமாகப் பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு செங்கரும்பு என்று அழைக்கப்படும் பன்னீர் கரும்பு, வெள்ளை சீனி, பச்சரிசி மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற 2024ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில், இதனை இரு பன்னீர் கரும்புகளாகவும், வெள்ளை சீனிக்குப் பதிலாக அச்சு வெல்லம் அல்லது உருண்டை வெல்லம், தேங்காய், பச்சரிசி, வெற்றிலை, வாழைப்பழம் மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கம் என்பதனை ரூபாய் 2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், அதற்கான பன்னீர் கரும்பினை, தமிழக கரும்பு விவசாயிகளிடம் இருந்தே தமிழக அரசு நேரடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (டிச.11) கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கைகளில், பன்னீர் கரும்பு மற்றும் தேங்காயை ஏந்தியபடி கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இது குறித்த கோரிக்கை மனுவைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கும்பகோணம் கோட்டாட்சியர் வாயிலாகக் கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழக அரசு 2024 பொங்கலுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்கும் போது தமிழகத்தில் உற்பத்தியாகும் பொங்கல் செங்கரும்பை மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும் மாராக மற்ற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யக்கூடாது.
அதேபோல், சென்ற ஆண்டு கரும்பு கொள்முதலில் அரசியல் குறுக்கீடுகள் இடைத்தரகர்கள் தலையீடு இருந்து உழவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே, இந்த ஆண்டு அரசியல் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடுகளைத் தவிர்த்துப் பொங்கல் செங்கரும்பைக் கொள்முதல் செய்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இரண்டு கரும்புகளை வழங்க வேண்டும்.
மேலும், வெள்ளை சீனிக்குப் பதிலாகத் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நாட்டு வெல்லத்தைக் கொள்முதல் செய்ய வெண்டும். அதேபோல் தேங்காய், பச்சரிசி, வெற்றிலை, வாழைப்பழம் மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கம் என்பதனை ரூபாய் 2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: எண்ணூரில் எண்ணெய் கசிவு குறித்து தமிழ்நாடு மேலாண்மைக் குழு இன்று (டிச.11) ஆய்வு..!