தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கீழ அலங்கம் பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மதுபான கடையின் எதிரில் தற்காலிக மீன் மார்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே காலையில் கடையின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த இடத்தில், இதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற முதியவரும் மற்றும் விவேக் என்ற இளைஞரும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட அங்கு சென்று மதுவினை வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த மதுவை அருந்திவிட்டு வெளியே வரும்போது குப்புசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றபோது கள்ளச்சந்தையில் மதுவினை விற்பனை செய்த நபர் மதுபாட்டில் பெட்டிகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
மேலும், மது குடித்த விவேக் என்ற இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இந்த இளைஞரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரண்டு பேரைப் போல, காலையில் இருந்தே கள்ளச்சந்தையில் ஏராளமானோர் மது வாங்கி அருந்தியுள்ளனர். இந்நிலையில் அவர்களும் உயிருக்கு என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதனால், டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இதன் முழு விவரம் போலீசாரின் விசாரணை முடிவுற்றப் பிறகே தெரியவரும். போலீசாரின் விசாரணை முடிந்து, பிரேத பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையிலேயே மது அருந்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததால் அவர்கள் உயிரிழந்தார்களா? என்ற தகவல் தெரியவரும்' என தெரிவித்தார். மேலும், இந்த இருவரும் அருந்திய மதுபானத்தில் சைனைடு கலந்துள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கீழ அலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபானம் குடித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக அந்த டாஸ்மாக்கிற்கு வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சீல் வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் விஷச்சாராயம் குடித்ததில் 14 பேரும்,
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பாதிப்புக்குள்ளாகிய பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் சமீபத்தில் குணமடைந்த சிலர் மட்டும் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த விஷச்சாராயம் அருந்தி பலியான குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண தொகையும் வழங்கப்பட்டுள்ளது. விஷச்சாராயம் அருந்தியதில் 22 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எங்கும் மது..எதிலும் மது..' இதுதான் திராவிடமாடல் அரசு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு