தஞ்சாவூர்: திருச்சியைச் சேர்ந்த மருத்துவரான கோபால்ராஜூ, தன்னிடம் இருந்த பழங்கால ஓலைச்சுவடிகளை முறையாக பராமரிக்கமாறு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த களப்பிரன், விஜயகுமார், ஸ்ரீதர் ஆகியோர் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரவஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச்சுவடிகளை ஒப்படைத்தனர்.
ஓலைச்சுவடிகளை பார்வையிட்ட நூலகத்தின் தமிழ்ப்பண்டிதர், சுவடிகளில் அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அரிச்சந்திர புராணம், பூர்வராசன் கதை, கர்ணன் அடைக்கல கும்மி, பிள்ளையார் சிந்து ஆகிய தொகுப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சில உதிரிப்பாடல்கள், அரிச்சுவடிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவை 150 ஆண்டுகள் பழமையானவை என கருதப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் நிர்வாகி களப்பிரன் கூறுகையில், "ஓலைச்சுவடிகள் பாதுகாப்பில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. ஆசியாவின் பழமைவாய்ந்த நூலகமான தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில், 50,000 சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நூலகத்தில் ஒப்படைக்கப்படும் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன.
பொதுவாக ஓலைச்சுவடிகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது சிரமம். அதை பாதுகாக்கவே தனியாக நிதி ஒதுக்க வேண்டும். அவற்றைப் பாதுகாப்பாக பராமரிக்கும் இடம் நூலகம் தான். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஓலைச்சுவடிகள் இருந்தால், அவற்றை சரஸ்வதி மஹால் நூலகத்தில் வழங்கலாம்" எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் தம்பிக்கு ஜாமீன் மறுப்பு!