தஞ்சாவூர்: 57 ஆண்டுகளுக்கு முன்னர் களவு போன குழந்தை ஞானசம்மந்தர், தஞ்சை புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில் நடராஜர் சிலை உட்பட 8 உலோக சிலைகள், இரு துவாரபாலகர் கற்சிலைகள் என மொத்தம் பத்து சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய அளவில், ஒரே சமயத்தில், பத்து சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டது இதுவே முதன்முறை என்றும், பல நூறு கோடி ரூபாய் சர்வதேச மதிப்பு கொண்ட இச்சிலைகள் அனைத்தும் இன்று (ஜுன்.6) முறைப்படி, கும்பகோணம் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 1965ஆம் ஆண்டு களவு போன அப்போதைய நாகை மாவட்டம், தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம், சாயாவனேஸ்வரர் கோயிலில் இருந்து குழந்தை சம்பந்தர் உலோக சிலை ஆஸ்திரேலியாவில் இருந்தும், தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில் இருந்து 1966இல் களவு போன உலோக நடராஜர் சிலை நியூயார்க் மாகானம் அமெரிக்காவில் இருந்தும், திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோயிலில் இருந்து 1985இல் களவு போன உலோக கங்காளமூர்த்தி, நந்திகேஸ்வரர் ஆகிய சிலைகள் அமெரிக்காவில் இருந்தும், தற்போதைய தென்காசி மாவட்டம் அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து 1994இல் களவு போன இரு துவாரபாலகர் கற்சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்தும் மீட்கப்பட்டன.
இதேபோல், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து 2008ஆம் ஆண்டு களவு போன விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி உலோக சிலை ஆகியவை அமெரிக்காவில் இருந்தும், எந்த கோயில் என அறியப்படாமல், நடனமாடும் குழந்தை சம்பந்தர் உலோக சிலை ஆஸ்திரேலியாவில் இருந்தும், தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் வான்மீகிநாதர் கோயிலில் இருந்து கடந்த 2020இல் களவு போன சிவன்பார்வதி உலோக சிலைகள் என மொத்தம் பத்து சிலைகள் சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை உதவியுடன் இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரப்பட்டது. இச்சிலைகள் அனைத்தும், கும்பகோணம் வந்துள்ளது.
சர்வதேச மதிப்பில் பல நூறு கோடி மதிப்பு கொண்ட மீட்கப்பட்ட பத்து சிலைகளும் உரிய ஆவணங்களுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து, சிலை திருட்டு வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தி அவற்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஓர் உயர்மட்டக் குழு'