தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அப்துல் ரசாக் என்பவர் கடை நடத்தி வருகிறார். தனது கடையில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி 25க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் பணம் வாங்கியுள்ளார்.
முதலீடு செய்தவர்களுக்கு ஆறு மாதத்தில் குறிப்பிட்ட நல்ல தொகையை தருவதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து முதலீடு செய்தவர்கள் ஒவ்வொரு முறை வருமானத் தொகை குறித்து கேட்கும் போதும் இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நடத்தி வந்த ஷாப்பிங் கடையை கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் வேறு நபர்களுக்கு விட்டுவிட்டு வாடகைக்கு கண்டெய்னர் லாரி பிடித்து தனது வீட்டில் உள்ள பொருட்களை காலி செய்து தலைமறைவாக முயன்றுள்ளார்.
இந்தத் தகவலை அறிந்த முதலீடு செய்தவர்கள், அப்துல் ரசாக் வீட்டிற்கு சென்று தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது அப்துல் ரசாக் அனைவரிடம் இருந்தும் தப்பித்து நான்கு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டு பொருட்கள் இருந்த லாரியை அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இழந்த பணத்தை பெற்றுத்தர வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர்.