தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி பெருமாள்(34). இவர் அதே பகுதியில் கூர்க்கா வேலை செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஹரேந்திர பகதூர் சிங் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எட்டு மாதமான அசோக் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், செல்வி பெருமாளுக்கு திடீரென காசநோய் வந்துள்ளது. இதையடுத்து மனைவி, கை குழந்தையை அநாதையாக விட்டுவிட்டு ஹரேந்திர பகதூர் சிங் திடீரென மாயமாகி விட்டார். மூன்று மாதங்களுக்கும் மேலாக கணவன் துணை இல்லாமல் செல்வி பெருமாள் தனது 8 மாத குழந்தையுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
ஒருபுறம் காசநோய், மறுபுறம் கணவன் கைவிட்டதை எண்ணி ஒரு கட்டத்தில் அவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சரிவர குழந்தையை கவனிக்காமல் இருந்ததால், பசியின் கொடுமையால் குழந்தை கதறி அழுதது. பிஞ்சு குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் செல்வி பெருமாளுக்கு உதவி செய்து குழந்தைக்கு உணவு அளித்து வந்துள்ளனர்.
இந்த தகவலறிந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பசியில்லா தமிழகம் அமைப்பின் இளைஞர்கள், நேரில் சென்று செல்வி பெருமாள், அவரது குழந்தையை மீட்டு திருநெல்வேலியில் உள்ள அரசு முகாமில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். மேலும், செல்வி பெருமாளுக்கு அரசு மருத்துமனையில் காசநோய் சிகிச்சையளித்த பின்னர், தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் மூலம் தாய் மற்றும் குழந்தையை மாநகராட்சி முகாமில் சேர்ப்பதற்கான உதவிகளை கோரியுள்ளனர்.
இதற்கிடையில், மனநலம் பாதித்த நிலையில் இருந்த செல்வி பெருமாள், திடீரென இளைஞர்கள் வந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதும் பதறிப்போனார். எங்கே தனது குழந்தையை பறித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களுடன் செல்ல மறுத்தார். பின்னர், அவர்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம் பாதுகாப்பான இடத்துக்குத்தான் அழைத்துச் செல்கிறோம் என்று அறிவுறுத்தினார்கள்.
இறுதியாக செல்வி பெருமாள் , கை குழந்தையை தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் அழைத்துச் சென்று, பத்திரமாக மாநகராட்சி முகாமில் அனுமதித்துள்ளனர். கரோனா ஊரடகால் பல்வேறு தரப்பினர் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில், தென்காசியில் தனது குழந்தையுடன் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பசிக்கு போராடிய சம்பவம் பார்ப்போரை கண்கலங்கச் செய்தது. மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு உதவிய இளைஞர்களின் செயலையும் ஊர் பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரசவ வலியால் துடித்த பெண் - உடனடியாக உதவிய காவலர்கள்!