தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நாச்சியார்புரத்தில் பாண்டித்துரை என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அந்தத் தோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த அய்யனார் (40) என்பவர் ஆட்டுக்கிடை அமைத்து, ஆடுகளைப் பராமரித்துவருகிறார்.
நேற்றிரவு ஆடுகளின் காவலுக்காக அய்யனார் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில் ஆலங்குளம் நெட்டூரைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் ஆடுகளைத் திருட தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது ஆடுகள் சத்தமிட்டதையடுத்து அய்யனார் எழுந்து பார்த்தபோது, அக்கும்பல் ஆடுகளைத் திருட முயற்சி செய்து கொண்டிந்துள்ளனர்.
தொடர்ந்து அய்யனாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அய்யனார் தனது உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கவே, அவரது உறவினர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கிடைக்கு வந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் நெட்டூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரும், பார்த்திபன் என்பவரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வி.கே. புதூர் காவல் துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் முத்துப்பாண்டி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பார்த்திபனுக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியீடு!