விவசாயம் சார்ந்த தொழில்களிலேயே குறைந்த நாளில் அதிக வருமானம் தரக்கூடியது இந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயம். தண்ணீர், உரம், வேலையாட்கள் பிரச்னை இவ்வாறான எந்தவித சிக்கலுமின்றி வருமானத்தை ஈட்டித்தரக் கூடியதாக இத்தொழில் இருந்து வருகிறது.
இதற்கு தட்பவெட்ப நிலை அவசியம் என்பதால், தென் மாவட்டங்களில் தென்காசி மாவட்டத்தில் இதில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் மஞ்சள் நிற கூடு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள், தற்போது வெண்ணிற கூடு வளர்ப்பில் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர்.
பட்டுப்புழு வளர்ப்பிற்கு பிரதானமான மல்பெரி செடி வளர்ப்பு உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மல்பெரி செடிகளை வளர்க்கலாம். இச்செடியை ஒருமுறை நடவு செய்தால் 20 ஆண்டுகளுக்கு பயன்தரக்கூடியதாக உள்ளது. இதனையடுத்து பட்டுப்புழு வளர்ப்பதற்கு செட் அமைத்து அதில் கட்டில் போல இருக்கைகள் அமைத்து அதிக காற்றும், அதிக வெயிலும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
மேலும், பட்டுப்புழு வளர்ச்சி துறையிடமிருந்து முட்டை தொகுதிகளை வாங்கி விவசாயிகள் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். ஆரம்பகட்டத்தில் முட்டைகளை வாங்கி புழு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள், தற்போது ஏழு நாள் வளர்ந்த இளம் புழுக்களை நேரடியாக வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். காலை, மாலை என இருவேளை மல்பெரி செடிகளை பட்டுப்புழுவிற்கு உணவுகளாக கொடுப்பதன் மூலம் ஒரு மாதத்தில் அது முழு வளர்ச்சி அடைகிறது. அதன்பின் அறுவடை செய்யப்படுகிறது.
100 கிலோ முட்டை தொகுதியை முழுமையாக அறுவடை செய்தால் 100 கிலோ முட்டைக் கூடுகள் கிடைக்கிறது. ஆனால் எலி, அணில் போன்ற பிரச்னை காரணமாக 70 முதல் 80 விழுக்காடு வரை அறுவடை செய்யப்படுகிறது. இவ்வாறு லாபத்தை ஈட்டித் தந்த பட்டு வளர்ப்பு கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சிதைந்து காணப்படுகின்றன. தென்காசி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த பொதுமுடக்கத்தால் பலர் காணாமல் போய்விட்டனர்.
இந்த பட்டுப்புழு வளர்ப்பில் 20 ஆண்டுக்கும் மேல் செயல்படும் விவசாயி மாரியப்பன் இதுகுறித்து கூறுகையில், பட்டுப்புழு வளர்ப்புக்கு செட் அமைப்பதற்கு லட்சக்கணக்கான அளவில் செலவு செய்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெண்ணிற கூடுகளை கரோனா காலகட்டத்திற்கு முன்புவரை ரூ. 400 முதல் 500 வரை நாங்கள் விற்பனை செய்த நிலையில், தற்போது 100 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கும் விற்பனை செய்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இதனுடைய உற்பத்தி செலவே ரூ. 250 ஆகிறது. இந்த விவசாயம் அந்நிய செலவீனத்தை மீட்டுத் தரக் கூடியது. ஒரு கிலோவிற்கு ரூபாய் 50 மானியமாக வழங்க வேண்டும். இந்த கரோனா தொற்று காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பட்டுபுழு வளர்ப்பை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இவ்வகை விவசாயத்தை ஊக்குவித்தால் மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கூடிய சூழல் ஏற்படாது. இதனால் அந்நியச் செலவாணியை குறைக்கலாம். இதை அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றால், நாளுக்கு நாள் நலிவடைந்து இத்தொழில் காணாமல் போகக் கூடிய சூழலும் ஏற்படும் என்றார்.
தென்காசி மாவட்ட விவசாயிகளிடமிருந்து வெண்ணிறப் பட்டுக்கூடுகள் தென்காசி மாவட்டத்திலுள்ள பட்டு வளர்ச்சி துறை அலுவலகங்களில் கிலோ கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் கூடுகள் வெந்நீர் மூலம் அவித்து எடுக்கப்பட்டு இயந்திரங்கள் உதவியுடன் நூல்களாக பிரித்தெடுக்கப்படுகிறது.
இதுகுறித்து பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நிஷாந்தி கூறுகையில், தென் மாவட்டங்களிலேயே தென்காசி மாவட்டத்தில் அதிக அளவு பட்டு வளர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. லாபகரமான தொழில் என்பதால் அதிகளவில் விவசாயிகளை ஈடுபடுத்தும் நோக்கில், பட்டு வளர்ச்சித்துறை வாயிலாக விவசாயிகளுக்கு செட் அமைகப்பதற்கான மானியம், உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு ஊரடங்கு காலத்திலும் பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் இவ்வகை விவசாயத்தை வீட்டில் இருந்தபடியே எளிதாக பெண்களும் மேற்கொள்ளலாம் என்பதற்காக பெண்களுக்கும் விவசாயம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றார்.
வருடத்தில் பத்து மாதங்களும் நடைபெறும் இவ்வகை தொழிலில் ஆர்வம்காட்ட அதிக அளவு விவசாயிகள் இருந்தும், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் முழுமையாக இருக்குமேயானால் பட்டுநூல் உற்பத்தியில் சீனாவிற்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய இலக்கை விவசாயிகள் ஏற்படுத்தித் தருவார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: 2020 இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்க பெண் கவிஞர்