தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நான்காயிரம் விசைத்தறிகளை நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தற்போது மீண்டுவரும் நிலையில், நுால்களின் விலை ஏற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுவருவதாகவும், எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் 100-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
![தென்காசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-02-power-loom-petition-tn10038-hd_29012021144017_2901f_01506_888.jpg)
இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “நூல்கள் வெளிநாடுகளுக்குப் பெரியளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், கைத்தறிக்கு அடுத்தபடியாக உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் பயன்படுத்தும் நூல்களும் பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சேலை விலையும் ரூ.45 உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நூல் ஏற்றுமதி செய்வதைத் தடுக்க வேண்டும். நெல், கரும்பு போன்றவற்றிற்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்வது போன்று நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், நூல் விலை நிர்ணயம் செய்ய கட்டுப்பாடு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி உள்ளோம்” எனக் கூறினர்.
மேலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலம் கவனயீர்ப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை: பெயர் சூட்டிய ஆட்சியர்!