தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலமாகும். இந்த சீசன் காலங்களில் நாடெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதோடு அருவியில் உற்சாகமாக நீராடி செல்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு நோய்த்தொற்றின் காரணமாக தமிழ்நாடு அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக தடை அமலில் உள்ளதால், குற்றாலத்தில் உள்ள சிறு-குறு வியாபாரிகள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக நேற்று (நவ.06) மாலை முதல் தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இதேபோல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் விடியவிடிய மிதமான சாரல் மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குற்றாலத்தில் ஆள் நடமாட்டம் இன்றி ஏற்கனவே வெறிச்சோடியுள்ளது. இருப்பினும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் அருவியைப் பார்த்து ரசிப்பதோடு அதற்கு முன் நின்று செல்பி எடுத்துச் சென்றும் வருகின்றனர். குளிக்க தடை உத்தரவு இருப்பதன் காரணமாக 24 மணிநேரமும் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.