தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா ஹெப்சி ராணி. இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.
மார்ச் மாதம் இறுதியில் தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால் அப்போதிருந்தே மருத்துவர் ரீட்டா ஹெப்சி ராணி மருத்துமனையில் தங்கி பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக அவர் அங்கேயே தங்கியிருந்து, நோயாளிகளை கவனித்து சிகிச்சையளித்து வந்தார். இவரது கணவர் செல்லையாவும் பொது மருத்துவர். இவர் சொந்த ஊரில் தனியாக கிளினிக் நடத்திவருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவர் ரீட்டா ஹெப்சி ராணி, தனது கணவர், குழந்தைகளைப் பிரிந்து மருத்துவனையில் தங்கி பணியாற்றிவந்த நிலையில் தற்போது அவருக்கு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சற்று ஓய்வு கொடுத்துள்ளது.
இதையடுத்து, ரீட்டா ஹெப்சி ராணி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊரான ஆவுடையானூருக்கு மே 14ஆம் தேதி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் மருத்துவர் ரீட்டாவை வரவேற்றனர். பின்னர், அவருக்குச் சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
மேலும், "கரோனாவால் பலர் உயிரிழந்துவரும் நிலையில் நம் ஊரைச் சேர்ந்த மருத்துவர் ரீட்டா ஹெப்சி ராணி இரண்டு மாதங்களாக குடும்பத்தைப் பிரிந்து மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்துள்ளார்.
எனவே அவரது சேவையைப் பாராட்டி அவரை வாழ்த்துவோம்" என்று ஊர் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஊர் மக்களின் இந்தப் பாராட்டைப் பெற்றுக்கொண்ட மருத்துவர் ரீட்டா ஹெப்சி ராணி மகிழ்ச்சியடைந்தார்.
இதையும் படிங்க: 'மது அருந்துவதால் கிருமிகள் சாகாது' - குடிமகன்களை எச்சரிக்கும் மனநல மருத்துவர்