தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி மாவட்ட வர்த்தக கழகத்தினை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையுடன் இணைக்கும் விழா பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்குத் திருநெல்வேலி மாவட்ட வர்த்தக கழகத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்ரமராஜா சிறப்புரையாற்றிப் பேசினார். இந்த இணைப்பு விழாவில் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் ஆரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திருச்சியில் மே5ஆம் தேதி நடைபெற உள்ள 39ஆவது வணிகர் தின மாநாட்டில், முதன்மை சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டலத்திலிருந்து 50 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்கின்றனர்.
தென்காசி-திருநெல்வேலி புதிதாக அமைக்கப்படும் 4 வழிச் சாலையை விரைவாக முடிக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதுடன் தென்காசி-திருநெல்வேலி 4 வழிச்சாலையைப் பேட்டையிலிருந்து மதுரை-தூத்துக்குடி, நாகர்கோயில் 4 வழிச்சாலைகளில் இணைத்து, ரிங்ரோடு அமைக்க வேண்டும். தென்காசி திருநெல்வேலி 4 வழிச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
தென்காசி-திருநெல்வேலி 4 வழிச்சாலையில் உள்ள மரங்களைப் பிடுங்கி நடும்போது பாதுகாப்பான முறையில் நட வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு விதிக்கும் செஸ்வரி முழுமையாக மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி, அறநிலையத்துறை ஆகிய துறைகளுக்குச் சொந்தமான கடைகளின் வாடகை 2016ஆம் ஆண்டு முதல் முந்தைய அரசு பலமடங்கு வாடகை உயர்த்தியுள்ளது.
இந்த பல மடங்கு வாடகை உயர்வு காரணமாக வணிகர்கள் வாடகை கட்ட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தற்போது நடைமுறையில் உள்ள வாடகையை வணிகர்கள் இன்று வரை செலுத்தி வருகிறார்கள். பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகை மட்டுமே நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து கட்ட வேண்டும் எனவும், இல்லையெனில் கடைகளை அதிகாரிகள் சீல் வைப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. இந்த உயர்த்திய வாடகையைச் சீர்செய்வதற்குத் முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கூறினார்.
இதையும் படிங்க: Oscars 2022: ஆஸ்கர் விருதுகள் 2022 லைவ் அப்டேட்ஸ்