தென்காசி: கடையநல்லூர் தாலுகாவின் பாறைக்குளம் கிராமத்தில் பல வருடங்களாக நியாய விலைக்கடை இல்லாமல் பொதுமக்கள் அரிசி, கோதுமை,சீனி,மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அவற்றை வாங்க 4 கி.மீ தொலைவு தூரம் கடந்து சென்று மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில்தான் பொருள்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
போதிய பேருந்து வசதிகள் கூட இல்லாதநிலையில் அங்குள்ள மக்கள் ரேசன் பொருள்கள் வாங்க சரியான நேரத்திற்கு செல்ல முடியாமலும் பொதுமக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் 128 குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில் எங்கள் கிராமத்திற்கென்று, புதிதாக ஒரு நியாய விலைக்கடை வேண்டும் என்று பலமுறை பல அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமாரிடமும் இதுபற்றி கோரிக்கை கிராம மக்கள் மனு அளித்தனர். கோரிக்கையை ஏற்று சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ புதிய நியாய விலை கடை திறப்பதற்கு, தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன் விளைவாக, தற்போது பாறைக்குளம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 13) முதன்முதலாக புதிய நியாய விலை கடையை சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், தங்களது கிராமத்தில் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, தற்போது நியாய விலைக்கடை திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் உற்சாகம்! கரோனா விதிகளை பின்பற்றி வகுப்புகள்