தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் நேற்று(நவ.06) முன் தினம் பெத்தான்பிள்ளைகுடியிருப்பு, சிவசைலம் சாலையில் கரடி தாக்கி பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன், சைலப்பன் மற்றும் கருத்தலிங்கபுரம் வைகுண்ட மணி ஆகியோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைகுண்டமணி நேற்று(நவ.07) அதிகாலை மசாலா வியாபாரத்திற்காக அந்த வழியாக சென்றபோது முதலில் அவரை கரடி தாக்கியது. அவரது சத்தம் கேட்டு அவரைக் காப்பாற்ற முயன்ற போது அண்ணன், தம்பிகளான சைலப்பன் மற்றும் நாகேந்திரனை கரடி மிக கொடூரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கரடி தாக்குதலில் படுகாயம் அடைந்த சைலப்பன் மற்றும் நாகேந்திரன் இருவருக்கும் தற்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இருவருக்கும் முகத்தில்தான் அதிக காயம் இருந்தது. முகத்தில் மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை கரடி மிக கொடூரமாக கடித்திருந்தது. எனவே கிழிந்து தொங்கிய சதைகளை தைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன் மூலம் இருவருக்கும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ’கரடி தாக்குதலில் காயப்பட்ட மூன்று பேரில் இருவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளோம். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல் வேட்டையை நடத்திய சிவிங்கி புலிகள்.. குனோ பூங்காவில் நடந்தது என்ன?