தென்காசி: கோடைக் காலம் மட்டும் இன்றி எல்லா காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகள் விளங்குகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கால் தடுப்பைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளும் வெள்ளப்பெருக்கில் தப்பவில்லை.
இந்த நிலையில் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இரண்டாம் நாளாக குறையாத நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிப்பதற்கு இரண்டாம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவிகளில் தண்ணீர் வரத்து சீரான நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றாலத்தில் பிரதான அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மெயின் அருவி பகுதி சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி மீது பாலியல் புகார்.. புளியங்குடி போலீசார் வலைவீச்சு!