தென்காசி: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நேற்று (செப் 30) முழுவதும் குற்றாலம் ஐந்தருவிகளில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து குற்றால அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும், காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி நேற்று மாலை மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், இன்று (அக் 1) காலை தடை விலக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு குற்றாலம் காவல் துறையினர், குற்றாலம் பகுதிகள் மற்றும் ஐந்தருவி பகுதியில் செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குன்னூர் பேருந்து விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!