தென்காசி மாவட்டத்தில் இதுவரை 33 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் காய்ச்சலை முற்றிலும் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறன்றன. தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிகளில் அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்றும் வகையில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது.
குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தடுக்கவும் பொதுமக்களுக்கு அன்றாடம் அத்தியாவசியமாகத் தேவைப்படும் மளிகை பொருள்கள் வீடு தேடி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தகுந்த இடைவெளியை பின்பற்றும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக நகராட்சியில் மூன்று விதமான வண்ண அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளில் தகுந்த இடைவெளியை 100 விழுக்காடு பொதுமக்கள் கடைப்பிடிக்கும் வகையில் வரும் ஞாயிறு அன்று மருந்துக் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும். இறைச்சிக் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பீதி: துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம்!