தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை சகாய மேரி தபால் வாக்களித்துள்ளார். இதனிடையே, அவர் தன்னுடைய வாக்கு சீட்டை புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர் மூலம் சம்பந்தபட்ட அரசு உதவி பெறும் பள்ளிக்கு பரிந்துரைக்கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஆசிரியை சகாய மரியாள் அந்த தபால் ஓட்டை தான் பெறவில்லை எனவும் அது குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் சங்கத்தின் மூலம் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் முகநூலில் பதிவிட்ட செந்தில் பாண்டியன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த வாக்குச்சீட்டு கணேசபாண்டியனின் மனைவியும் ஆசிரியையுமான கிருஷ்ணவேணிக்கு சொந்தமானது என்பதும், செந்தில் பாண்டியனும், கணேசபாண்டியனும் நண்பர்கள் என்றும் தெரியவந்தது.
தான் செலுத்திய வாக்குச்சீட்டை தன் மகனுக்கு காட்டுவதற்காக கிருஷ்ணவேணி புகைப்படம் எடுத்ததாகவும், அதனை அவருடைய கணவர் குழுவில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து காவல்துறையினர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த விவகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 178இன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது ஐடி சட்டத்தின் படி வழக்குப்பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் ஒரே நாளில் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல்