நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கார்கால சாகுபடிக்கான விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பெருங்கால் பாசன விவசாயிகள் கார்கால சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று முதல் 13-08-2020அன்று வரை 105 நாள்களுக்கு 538 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு பொதுபணித்துறை செயற்பொறியாளர்கள் அண்ணாத்துரை, பழனிவேல் ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர்.
இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், "பாசனத் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும். பெருங்கால் பாசன விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
அணை திறக்கப்பட்டதன் மூலம் ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிக்குளம், தெற்குபாப்பன்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலம் பயன்பெறும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஈரோட்டில் இரண்டாம் போக பாசனத்தை தொடங்கிய விவசாயிகள்!