தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் நேற்று(பிப்.28) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, "புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் மேம்படுத்தப்படும். குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலாத் தலங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளோடு கட்டமைக்க முயற்சி செய்யப்படும்.
மருத்துவக் கல்லூரியோடு இணைந்த அரசு மருத்துவமனை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து, அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம். விரைவில் நவீன மருத்துவமனை அமைக்க முயற்சி எடுக்கப்படும். பல்வேறு வசதிகள் கூடிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட நீதிமன்றத்துக்கு தனி கட்டட வசதி ஏற்படுத்த முயற்சிக்கப்படும். வருகின்ற ஏப்ரல் மாதம் தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்ட வனத்துறை அலுவலகம் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் கந்துவட்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகளில் நக்சலைட் நடமாட்டங்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும். குற்றாலத்தை பிளாஸ்டிக் பயன்பாடுகள் இல்லாமல், குப்பை இல்லா குற்றாலமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும். குற்றாலத்தில் உள்ள உணவகங்களில் விலைப்பட்டியல் கட்டாயம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: உறவினருடன் செல்ல இளம்பெண் கிருத்திகா விருப்பம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி