தென்காசி: தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது குற்றால அருவிகள் தான். இந்த குற்றால அருவிகளில் வருடம்தோறும் 3 மாதங்கள் மழைக்கால சீசன் களைகட்டும். மேலும் அதே வகையில், குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும், அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தை மட்டுமே நம்பி வருகின்றனர்.
மேலும், குற்றாலத்தைச் சுற்றிலும் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடி, அகரக்கட்டு, சாம்பவர்வடகரை, சுரண்டை, கம்பளி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் சூரியகாந்தி மலர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராகும் நிலையில் உள்ளன.
இந்தப் பகுதி முழுவதும் ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தில் சூரியகாந்தி பயிரிட்டு தற்பொழுது அறுவடைக்குத் தயாரான நிலையில், சூரியகாந்தி பூவின் வளர்ச்சி அந்தப் பகுதியில் கண்ணைக் கவரும் ரம்மியமான காட்சியாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தப் பகுதி முழுவதும் விவசாயிகள், சூரியகாந்தி பூவை ஏராளமாகப் பயிரிடுவது வழக்கம்.
மேலும், குற்றாலம் சீசன் களைகட்டும் சூழலில் தற்பொழுது அகரக்கட்டு பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பயிரிடப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவ்வாறு பூத்துள்ள இந்த சூரியகாந்தி மலர்களை காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள், தற்போது வருகை தந்து, மலரின் அழகை ரசித்தபடியும் மலர்களுக்கு நடுவே நின்று தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் வருகின்றனர்.
குறிப்பாக, சீசன் காலகட்டம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக, இந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி மலர்களைக் காண வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலை முதல் குற்றால அருவிகளுக்கு வருகை தந்த நிலையில், அகரக்கட்டுப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி மலரை காணப் படை எடுத்து வந்தனர்.
மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், தற்போது இந்த சூரியகாந்தி மலரைக் காண வருகை தந்துள்ள சூழலில், தங்களது குடும்பங்களுடன் சூரியகாந்தி மலரின் நடுவே நின்றபடி, தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் திடீரென உருவான இந்த சுற்றுலா தலத்தில், ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகை இருப்பதால், ஆங்காங்கே சாலை ஓர வியாபாரிகள் கடைகள் அமைத்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மயில் மீது பெண் புகார் - கர்நாடகாவில் அதிர்ச்சி