தென்காசி: குற்றாலநாதர் சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் செண்பகாதேவி அம்மன் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு அரிய மூலிகைகளையும் பல்நோக்கு உயிர் காடுகளையும் கொண்டுள்ளது.
இந்த மேற்கு தொடர்ச்சி மலை மருத்துவத்திற்கு மட்டுமல்லாமல் ஆன்மிகத்திற்கும் சிறந்து விளங்கும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. இங்கு குற்றாலம், பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவி என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி, நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று(ஏப். 19) கோயிலில் செண்பகாதேவி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு செண்பகாதேவி அருவியில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அருவியில் மஞ்சள் மற்றும் பூஜைப் பொருள்கள் தெளித்து தீர்த்தவாரி நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனோ பரவல் காரணமாக வனத் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி அருவி அடர் வனப்பகுதியில் அமைந்திருப்பதால்,
- வனத் துறை சார்பில் நீர்நிலைகளில், தடாகங்களில் இறங்கக்கூடாது.
- நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக்கூடாது.
- வன விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது.
எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அதன் பின்னரே பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வனப்பகுதியில் நெகிழிப் பொருள்களை வனப்பகுதிக்குள் கொட்டாமல் இருக்க கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 'கொடிய நோய்கள் இனி வரக்கூடாது: திருநங்கைகள் பிரார்த்தனை'