நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், மகாராஷ்டிராவிலிருந்து பீடி இலை லோடு ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நோக்கி வந்துக்கொண்டிருந்தவரை, சேலத்தில் மடக்கிய காவல் துறையினர் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை மேற்கொண்டப்பின் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஆலங்குளம் சென்றடைந்த ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, சேலத்திலிருந்து ஆலங்குளம் வட்டாட்சியருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்டவரை, சுகாதாரத் துறையினர் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பீடி இலையை இறக்கிய ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த லோடு மேன்கள் ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும்கூட, வரும் வழியில் யாருடனும் தொடர்பு வைத்து அதன் மூலமோ வேறு யாருக்கும் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
இதையும் பார்க்க: வைரஸை போல் தீவிரவாதத்தை பரப்புகின்றனர் - மோடி