தென்காசி மாவட்டம் வேப்பங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து பாண்டியன். இவர் சொந்தமாக வீடு வாங்கி குடியிருந்து வருகிறார்.
இவர் ஊர்மேல் அழகியான் அருகிலுள்ள சங்குபுரம் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது குடும்பத்தினர் ஊருக்கு சென்றுள்ள நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று அதிகாலை எழுந்து நடைபயிற்சி சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது வீட்டின் பின்வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர் உடுத்திருந்த கைலியால் முகத்தை சத்தம் போட விடாமல் மூடி கழுத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அக்கம்பக்கத்தினர் சாம்பவர் வடகரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து வீட்டின் பின் வாசல் பகுதியில், நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த முத்துபாண்டியனை் உடலை கைப்பற்றினார்கள்.
அதன் பின்னர் முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலை பணத்திற்காக நடக்கவில்லை என்பதும் வீட்டில் நேற்றைய டாஸ்மாக் கடையின் வருமானம் ரூபாய் 8 லட்சம் அப்படியே இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தக் கொலைக்கான பிண்ணனி காரணம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கட்ட விசாரணையை தொடங்கினர்.
அதில், முத்துப்பாண்டி மனைவி உஷாராணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. இது கணவர் முத்துப்பாண்டிக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் இவர்களது தொடர்பு தொடர்ந்து கொண்டிருக்கவே ஆறுமுகத்தை முத்துப்பாண்டி கொலை செய்துவிடுவார் என்று அச்சம் ஆறுமுகத்திற்கு வரவே முத்துப்பாண்டியை கொலை செய்ய ஆறுமுகம் திட்டம் திட்டியுள்ளார்.
இரண்டு முறை டிராக்டர், சுமோ வாகனங்களைக் கொண்டு கொலைமுயற்சியிலும் ஈடுபட்டுள்ளார், மனைவியின் தகாத உறவு வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக இதுகுறித்து புகார் எதுவும் முத்துப்பாண்டி காவல்துறையினரிடம் அளிக்கவில்லை.
இந்தநிலையில் தான் இந்த கொலை நடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆறுமுகம், இசக்கிதுரை, ஞானகுரு, கந்தசாமி, செண்பகராஜ் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.