தென்காசி: கரோனா வைரஸ் தொற்று காரணமாக தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு செல்லும் எட்டுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட பேருந்துகளும் கடந்தாண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்துவந்தாலும், கேரளாவில் கரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருந்ததால், கேரளாவில் இருந்து எவ்வித பேருந்துகளும் தென்காசி மாவட்டத்திற்கு இயக்கப்படவில்லை.
இதனால், தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள ஊர்களிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் பயணிகள், பொதுமக்கள் செங்கோட்டையிலிருந்து இருமாநில எல்லையான கோட்டைவாசல் செல்ல ஆட்டோவிற்கு 100 ரூபாய்வரை கட்டணம் செலுத்திவருகின்றனர். இதேபோன்று புளியரையில் இருந்து ஆரியங்காவு பகுதிக்கு செல்வதற்கு நபர் ஒருவர் 75 ரூபாய் ஆட்டோவிற்கு செலுத்துகின்றார்.
தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்லும் பயணிகள், கூலித் தொழிலாளர்கள் கோட்டை வாசல் பகுதிக்குச் செல்வதற்கு 100 ரூபாயும், திரும்பி வருவதற்கு 100 ரூபாயும் ஆட்டோவிற்கு கட்டணமாக கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தென்காசியிலிருந்து கேரளா வரை பேருந்துகளை இயக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தை அமாவாசையை முன்னிட்டு குற்றால அருவிகளில் அலைமோதிய கூட்டம்!